இன்றைக்குப் பலரின் இதயம் நொறுங்கி இருக்கும் சச்சின் ஆறு ஓட்டம் இருக்கும் போது ஆட்டமிழந்தது. எனக்கு மனசே கேட்கலைங்க! அவரும் பாவம் எவ்வளவு மன அழுத்தம் தான் தாங்குவாரு. ஒருத்தரா இரண்டு பேரா! உலகம் முழுவதும் அவருக்கு எத்தனை கோடி ரசிகர்கள் அத்தனை பேரும் போதாது என்று ஊடகங்கள் வேறு இன்றைக்காவது 100 போடுவாரா! என்று வெறுப்பேத்திக்கொண்டு இருக்கின்றன.
என்னதான் சச்சின் அதிக அனுபவம் பெற்றவராக இருந்தாலும் அவரும் மனுஷன் தானே! சும்மா இல்லாம சச்சின் 100 அடித்தால் 100 தங்க காசு என்று மேலும் பெரிதாக்கி விட்டார்கள். தற்போதைக்கு அவருக்கு 1000 தங்க காசு கொடுத்தால் கூட வேண்டாம் இந்த நூறைப் போட்டால் போதும் ஆளை விடுங்கப்பா என்று தான் இருப்பார்.
இது எல்லாம் என்ன பெரிய விசயமா என்று கேட்பவர்களுக்கு என்னோட ஒரு குட்டி அனுபவத்தைச் சொல்றேன். நான் முன்பு பணியில் இருந்த ஒரு நிறுவனத்தில் சில நேரம் மீட்டிங் நடக்கும் போது பிரசன்ட்டேசன் செய்ய ப்ரொஜெக்டர் அமைக்க வேண்டியதிருக்கும் வருபவர்கள் கொண்டு வரும் லேப்டாப் ஒவ்வொரு மாடல் என்பதால் (தற்போது இந்தப் பிரச்சனை இல்லை) அப்போது அந்த ப்ரொஜெக்டர் சில நேரங்களில் வேலை செய்யாது அப்போது கிட்டத்தட்ட ஐநூறு பேர் நமக்காக காத்து இருப்பார்கள் அப்போது ஏற்படும் டென்ஷன் இருக்கே அதெல்லாம் அனுபவித்தால் தான் தெரியும். எல்லோரும் நம்மையே பார்க்கும் போது நம்மால் இயல்பாகவே வேலையைச் செய்ய முடியாது. எப்படியோ விரைவில் சரி செய்து விடுவேன் என்று வைங்க! ஆனால் அந்த கொஞ்ச நேரம் உண்மையாகவே நரகம் போல இருக்கும்.
இது சும்மா ஐநூறு பேர் தான் பல கோடிப் பேர் முன்னாடி ஒவ்வொன்றாக 100 வரை கொண்டு செல்வது எவ்வளவு கொடுமையான ஒன்று என்று சச்சினைத் தவிர வேற யாருக்கும் சொன்னாலும் புரியாது. பேசுகிறவர்கள் ஆயிரம் சொல்லலாம் அனுபவிக்கிறவங்களுக்குத் தான் அது எவ்வளவு ஒரு கொடுமையான ஒன்று என்று புரியும்.
தனி ஒருவரின் ஆட்டத்தைப் பார்க்காதீங்க என்று கூறுகிறார்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்! ஆனால் என்ன பண்ணுறது சச்சின் பிடிக்குதோ பிடிக்கலையோ நம்ம குடும்பத்துல ஒருத்தர் மாதிரி ஆகிட்டாரு. என்னதான் திட்டினாலும் கோபப்பட்டாலும் பாசம் இல்லாமலா போய் விடும். எனக்கும் தான் சில நேரங்களில் சச்சின் விளையாட்டுப் பிடிக்காது.. ஆனால் சச்சினே பிடிக்கலைன்னு என்னால சொல்ல முடியலையே!
நேற்று சச்சின் மொக்கை போட்டதைப் பார்த்து சரி எப்படியும் விரைவில் ஆட்டமிழந்து விடுவார் என்றே நினைத்தேன்… ஆனால் இன்று காலையில் அதிரடியாக ஆடுவதைப் பார்த்ததும் சரி! ஒரு முடிவோட தான் இருக்காரு போல இன்றைக்கு 100 போட்டுடுவாரு என்று நம்பிக்கையாக இருந்தேன் ஆனால் Rampal மற்றும் Sammy அனைவரின் இதயத்தையும் நொறுக்கி விட்டார்கள் சொன்னது போலவே. ஐம்பது ஓட்டம் இருக்கும் போது ஆட்டமிழந்து இருந்தால் கூட வருத்தம் இருந்து இருக்காது இது உண்மையாகவே ரொம்பக் கஷ்டமா போச்சு.
சச்சின் 100 போடட்டும் அப்புறம் கச்சேரிய வச்சுக்கலாம் என்று இருந்தால் சொன்னது போலவே காலி செய்து விட்டார்கள். என்னமோ போங்க! கடுப்பா இருக்கு.
0 comments:
Post a Comment