தோன்றுபவரெல்லாம் புகழோடு தோன்றுவதில்லை. ஆயிரத்தில் ஒருவருக்குதான் புகழும் பணமும் வந்து சேரும். அவ்வாறு ஆயிரத்தில் ஒருவர்தான் சச்சின் தெண்டுல்கர். 1989ம் ஆண்டு தன் கிரிக்கெட் பயணத்தை தொடங்கி, 20 ஆண்டுகள் ஆகியும் ஆட்டம் காணாமல் ஸ்டெடியாக ஆடி வருகிறார் இந்த கிரிக்கெட் சூறாவளி!
1973ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் சச்சின் தெண்டுல்கர். அவரது தந்தை ரமேஷ் தெண்டுல்கர் ஒரு மராத்தி நாவலாசிரியர். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சச்சினுக்கு கிரிக்கெட்டில் அலாதி பிரியம். தாம்தூம் என ஆடி அடிக்கடி அக்கம்பக்கத்து கண்ணாடி ஜன்னல்களை பதம் பார்த்து விடுவாராம் சச்சின். சச்சின் தெண்டுல்கர், ஆரம்பக் காலத்தில், வேகப் பந்து வீச்சாளர் ஆக ஆசைப் பட்டாராம். இதற்காக சென்னை எம்.ஆர்.எஃப் ஃபவுண்டேஷனில் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். அப்பொழுது, அவரது பயிற்சியாளர் ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லீ (Dennis lilee). சச்சின் தெண்டுல்கரின் பந்து வீச்சு, லில்லீயைக் கவரவில்லை. 'நீ ஏன் பேட்டிங்ல கவனம் செலுத்தக் கூடாது?' என அறிவுறித்தியுள்ளார் லில்லீ. என்ன தீர்க்கதரிசனம். லில்லீயின் வாக்கு பலித்தது. அந்த நாள் ஒரு மாபெரும் சகாப்தத்தின் தொடக்கமாக அமைந்தது.
1988-ம் ஆண்டு, டிசம்பர் 18ம் தேதி, 15 வயதே ஆன நிலையில் சச்சின், மும்பைக்கும், குஜராத்துக்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் சதம் அடித்தார். தொடர்ந்து திலீப் கோப்பை, தியோடர் கோப்பை என தொடர்ந்து ஜமாய்த்தார் சச்சின். திலீப் வெங்சர்கார் பரிந்துரையின் பேரில் பாக்கிஸ்தானுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார் சச்சின். மராத்தியர் என்பதால்தான் அவரை அணியில் சேர்க்க வெங்சர்கார் பாடுபட்டார் என்று விமர்சனங்கள் உண்டு. இருக்கலாம்! ஆனால், 20 ஆண்டு தொடர் வெற்றிக்கு மராத்தியர் என்ற தகுதி மட்டும் போதாது!
1989. நவம்பர் 15. பாக்கிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி. சச்சினை அனைவரும் ஏளனமாக பார்த்தனர். 'இந்தப் பொடியனா ஆடப் போறான்?' என்று இந்திய ரசிகர்களுக்கே வியப்பு. 'பாக்கிஸ்தான் ஆட்டக் காரர்கள், முழு மாடை அப்படியே தின்பார்களே? இந்த சிறுவனால் சமாளிக்க முடியுமா?' என்று குழப்பம். பாக்கிஸ்தானியர்கள் வீசிய ஒவ்வொரு பந்தும் தீயை கக்கியது. மூஞ்சி பெயர்ந்தால் கூட பரவாயில்லை. பவுண்சரை போட்டு வெளியே அனுப்புங்கள் என்று பாக்கிஸ்தானிய பந்து வீச்சாளர்களுக்கு ரகசிய உத்தரவை பிறப்பித்தார் கேப்டன் வாசிம் அக்ராம். முதல் டெஸ்ட், முதல் இன்னிங்சில், வக்வார் யூனிஸின் பந்து வீச்சுக்கு, 15 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டார் சச்சின். இது சச்சினை சற்று சோர்வடைய செய்யவே, 'நீ டக் அவுட் ஆகி pavillion-க்கு திரும்பினால் கூட பரவாயில்லை. பயப் படாம ஆடு.' என குளுக்கோஸ் வார்த்தைகளை சொல்லி சச்சினை தேற்றியவர், அப்பொழுது இந்திய அணி கேப்டனாக இருந்த, நம்மூர் ஸ்ரீகாந்த். இந்த உற்சாகமான வார்த்தைகளை தொடர்ந்து டென்ஷனை துறந்து கோதாவில் இறங்கிய சச்சினுக்கு ஏறுமுகம்தான்!
1990ல் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், 119 ரன்களை குவித்து, இங்கிலாந்து பத்திரிகைகளின் பாராட்டு மழையில் நனைந்தார் சச்சின் தெண்டுல்கர்.
1996. இலங்கைக்கு எதிரான உலக கோப்பை அரை இறுதி போட்டி. இலங்கை வீரர்கள், அதிலும் குறிப்பாக, ஜெயசூர்யா, பயங்கர ஃபார்மில் இருந்த நேரம். சச்சின் தெண்டுல்கர் மட்டுமே சற்று நிதானமாக ஆடினார். அவர் அவுட் ஆனவுடன், நம் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தன. சச்சின் அவுட் ஆகும் போது யாராவது பாத்ரூம் சென்றிருந்தால், அவர் திரும்பி வரும் போது, 'அதுக்குள்ள எல்லாரும் அவுட் ஆயிட்டாங்களா?' என துணுக்குற வைத்திருக்கும்! அவ்வளவு மோசமான ஆட்டம். சச்சின், இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த எவ்வளவு பெரிய பொக்கிஷம் என ரசிகர்கள் உணர ஆரம்பித்ததும் அப்பொழுதே!
1999ல் பாக்கிஸ்தானுக்கு இடையேயான, சென்னையில் நடந்த ஆட்டத்தின் போது சச்சின் தெண்டுல்கருக்கு மோசமான முதுகு வலி ஏற்பட்டது. சச்சின் இனி அவ்வளவுதான் என சிலர் ஆனந்தக் கூத்தாடினர். ஃபீனிக்ஸ் போல மீண்டு(ம்) வந்தார் சச்சின். 1999 உலகக் கோப்பை ஆட்டங்களின் போது, சச்சின் தெண்டுல்கரின் தந்தை மறைந்தார். ஆனால், ஆட்டத்தில் கவனம் சிதறாமல் ஆடி, இந்தியாவுக்கு ரன்களை குவித்தார் சச்சின் தெண்டுல்கர். நிச்சயமாக ரமேஷ் தெண்டுல்கரின் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும்.
2003-ல் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடந்தது. பாக்கிஸ்தானுக்கு இடையேயான ஆட்டத்தில் 194 நாட் அவுட் என்ற நிலையில் சச்சின் தெண்டுல்கர் இருந்த போது, ஆட்டத்தை declare செய்தார் கேப்டன் டிராவிட். இது சச்சினை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது பற்றி சச்சினிடம் நிருபர்கள் கேட்டதற்கு, சச்சின் அவசரப் பட்டு வார்த்தை எதையும் விடவில்லை. இந்த விவேகம்தான் சச்சினை புகழின் உச்சியில் இன்னும் வைத்துள்ளது.
20 ஆண்டுகளாக தொடர்ந்து கிரிக்கெட் சூப்பர் ஸ்டாராக திகழும் சச்சின் தெண்டுல்கரை பாராட்டி மகிழ்வதில் மணியோசை.காம் பெருமை அடைகிறது!

0 comments:

Post a Comment